சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனையும் சூடுபிடித்து உள்ளது. இதன் காரணமாக ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ரெயில்  பட்டாசு கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரெயில்வே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 18ந்தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக பட்டாசுகள் விற்பனையும் கன ஜோராக நடைபெற்று வருகிறது. டில்லி, மும்பை போன்ற இடங்களில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரெயில்களில் பட்டாசு உள்பட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, ரெயில்வே போலீஸார் சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில்  வழங்கி வருகின்றனர்.

அந்த துண்டு பிரசுரத்தில்,  ரெயிலில் பட்டாசு எடுத்துச் செல்லாதீர், மீறுவோருக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

ரெயில்வே போலீசார் எந்த நேரத்திலும், எந்த இடதிலும் சோதனை மேற்கொள்வார்கள் என்றும், அப்போது பட்டாசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தெரிவித்து உள்ளனர்.