காஞ்சிபுரம்,
தமிழகத்தின் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள கோவில் வாசலில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலான குமரக்கோட்டம் முருகன் கோவில் வாசலில் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இது கோவிலுக்கு வருவோர் போவோரிடம் வியப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக நமது பகுதியை சேர்ந்த பிச்சைக்காரர்கள்தான், வெளிநாட்டினரை சூழ்ந்து பிச்சை யெடுப்பார்கள். ஆனால், நேற்று நடை பெற்ற செயலோ நேருக்கு மாறாக இருந்தது. வெளிநாட்டை சேர்ந்தவர் நம்மவர்களிடம் பிச்சை கேட்டதால் பரபரப்பு நிலவியது.
ரஷ்யாவை சேர்ந்த 26 வயதான இளைஞர் எவிங்வி பார்த்திகோவ். இவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் உள்ளனர். கடந்த வாரம் சுற்றுலா விசா மூலம் இந்திய வந்த பார்த்திகோவ், தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்கள் மற்றும் மாமல்லபுரம் கடற்கரைகளை சுற்றி பார்க்க விரும்பினார். அதன்படி நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களை சுற்றி பார்த்தார். அப்போது தனது தேவைக்காக ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க முயற்சித்துள்ளார்.
அவரது கார்டு இங்கு உபயோகிக்க முடியவில்லை. இதன் காரணமாக கோபத்தில் தனது ஏடிஎம் கார்டை உடைத்துவிட்டார். இதன் காரணமாக செலவுக்கு பணமில்லாமல் அவதிப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை காஞ்சிபுரம் முருகன் கோவிலுக்கு வந்த அவர், செலவுக்கு என்ன செய்வது தெரியாமல் கோவில் வாசலில் அமர்ந்து, தனது தொப்பியை பிச்சை பாத்திரமாக்கி பிச்சை கேட்க தொடங்கினார்.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவரின் செயலை கண்டு வியந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார் கோவிலுக்கு வந்து பார்த்திகோவிடம் விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து செலவுக்கு பணம் இல்லாததால் பிச்சை எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவருக்கு ரூ.500 கொடுத்து, சென்னை சென்று ரஷ்ய தூதரகத்தை தொடர்புகொண்டு ஆவன செய்யுமாறு அறிவுறு த்தி, சென்னைக்கு ரெயிலில் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவத்தால், காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம், வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜின் கவனத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “உங்கள் நாடு ரஷ்யா எங்களின் நண்பர். சென்னையில் உள்ள எங்களது அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். ” என்று கூறி உள்ளார்.