சென்னை,
தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும் என்று கூறினார்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சமீப நாட்களாக டெங்கு வின் பாதிப்பு அதிகரித்து ஏராளமானோர் பலியாகி உள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் 100க்கும் மேற்பட் டோரை டெங்கு காய்ச்சல் பலிவாங்கி உள்ளது.
இதையடுத்து தமிழக அரசும், சுகாதாரத்துறையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மத்திய அரசும் தமிழக அரசை விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
தமிழகத்தில் டெங்குவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிக்க முடியும். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்றும், டெங்கு கொசு வளர காரணமாக இருக்கும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.
மேலும், உலகம் முழுவதும் டெங்கு பாதிப்பு உள்ளது என்றும், தற்போது 140 நாடுகளில் டெங்கு பாதிப்பு இருப்பதாகவும் கூறினார்.