லக்னோ,
வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உ.பி.மாநில சட்டமன்ற தேர்தலை, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சமாஜ்வாடி-காங் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தற்போது சமாஜ்வாடி கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வாகி உள்ள கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், காங்கிரசுடனான கூட்டணி வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறினார்.
மதுராவில் செய்தியாகளிடம் அவர் கூறியதாவது,
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்கூட்டியே வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அது குறித்து வியாபாரிகளிடம் தான் கேட்க வேண்டும். அவர்களே அதற்கு பதில் தெரிவிப்பார்கள் என்றார்.
மேலும், தற்போது உத்தர பிரதேசத்தை ஆளும் பா.ஜனதா அரசு எனது (அகிலேஷ் யாதவ்) தலை மையிலான அரசு, தனது ஆட்சியின்போது செய்யப்பட்ட வளர்ச்சி திட்டங்களை விட எதையும் சாதிக்கவில்லை என்றும், யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்ற பிறகு 3 தடவை மதுரா வுக்கு வந்து சென்றுள்ளார். ஆனால் ‘பிரிஜ் பூமி’க்கு என்று எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும் யோகி ஆதித்யநாத்தின் கனவு திட்டமான ‘விருந்தாவன் திட்டம்’ இன்னும் கனவாக தான் உள்ளது. யமுனை ஆற்றை சுத்தம் செய்ய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றார்.
காங்கிரஸ் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அகிலேஷ், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டோம். அதுபோல வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் ஆன கூட்டணி தொடரும்” என்றார்.
மேலும், அவரது சித்தப்பாவான , மூத்த தலைவர் சிவ்பால் யாதவுக்கு கட்சியில் மரியாதைக்குரிய பதவி வழங்கப்படுமா? என கேட்ட போது, “அது குடும்ப பிரச்சினை. அது விரைவில் தீர்க்கப்படும்”.
இவ்வாறு அவர் கூறினார்.