டில்லி,
வரும் 13ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் பங்குகள் அறிவித்துள்ளது.
ஏற்கனவெ கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். பேச்சு வார்த்தைக்கு பின்னர் அது விலக்கிக்கொள்ளப் பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவித்து உள்ளனர்.
தினமும் பெட்ரோல் விலை மாற்றம் செய்யப்படுவதை கண்டித்தும்,மேலும் நாடு முழுவதும் மத்திய ஒரே விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மே 1 முதல் தினசரி பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைத்துக் கொண்டு வந்தன.
ஆனால் தற்போது குறிப்பிட்ட நகரங்களில் தினசரி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வரும் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது..
இந்நிலையில் தினமும் விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ம் தேதி முதல் பெட்ரோல் பங்க்குகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில், இந்தியா முழுவதும் உள்ள 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.