டில்லி:

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உ.பி. சட்டமன்ற தேர்தல் நேரத்தின்போது சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக கட்சி உடைந்து, கட்சியின் முழு பொறுப்பும் அப்போது முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவின் கைக்கு சென்றது.

அதையடுத்து, அகிலேசின் சித்தப்பா சிவ்பால் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை எதிர்த்து கட்சி தலைவர் முலாயம்சிங் அகிலேஷை கட்சியில் இருந்து நீக்கினார். பின்னர் அதை வாபஸ் பெற்றார்.

இதன் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டு, கட்சியை அகிலேஷ் யாதவ் கைப்பற்றினார். அவரை கட்சி தலைவராக கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டார். ஆனால், சமாஜ்வாதி கட்சி பெரும் தோல்வியையே சந்தித்த்து.

இந்நிலையில்,  அகிலேஷ் யாதவ் கடந்த வாரம் தனது தந்தையத முலாயம் சிங் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் தேசிய மாநாட்டில் பங்கேற்க அழைத்தார்.

இந்த சூழ்நிலையில் இன்று  சமாஜ்வாடி கட்சியின் தேசிய மாநாடு ஆக்ராவில் நடைபெற்றது.

இதில் சமாஜ்வாதியின்  கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், கட்சியின் தலைவரின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கும் வகையில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு கட்சி தலைவராக அகிலேஷே நீடிப்பார்.

இத்தகவலை தேசிய மாநாட்டின்போது கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் அறிவித்துள்ளார்.