டில்லி,

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல மத்திய அரசு விதித்துள்ள தடையை சுப்ரீம் கோர்ட்டு மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வரும் 9ஙந் தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.என்.எக்.எஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.  வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வந்தார். இதையடுத்து, அவர் வெளிநாட்டுக்கு ஓடிவிடாமல் தடுக்கும் வகையில்,  அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, கார்த்தி சிதம்பரம் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார். ஆனால், சிபிஐ வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை அக்டோபர் 9 ம் தேதி வரை நீட்டித்து வழக்கின் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.