டில்லி

ஜி எஸ் டி அமுலாக்கத்தினால் நடுத்தர மக்கள் மாதாந்திர செலவு அதிகமாகி துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த ஜூலை 1 முதல் ஜி எஸ் டி வரிவிதிப்பு அமுலாகி உள்ளது தெரிந்ததே.  இதனால் பல பொருட்கள் விலை குறைந்துள்ளது என சொல்லப் பட்டாலும், சில அன்றாடத் தேவைக்கு இன்றியமையாத பொருட்கள் கடுமையாக விலை ஏறி உள்ளது.  இது குறித்து ஒரு ஆன்லைன் கணக்கெடுப்பு நிறுவனம் சர்வே நடத்தி உள்ளது.

அந்த கணக்கெடுப்பின் முடிவில் காணப்படுவதாவது :

கணக்கெடுப்பில் கலந்துக் கொண்டவர்களில் நகர் புறத்தை சேர்ந்தவர்களில் 54% பேர் தங்களுடைய மாதாந்திர செலவு 30% வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்..  மற்றவர்களில் 6% பேர் மாதாந்திர செலவு குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.  மீதமுள்ளவர்கள் விலை உயர்வை ஒப்புக்கொண்டாலும் அதிகரிப்பு எவ்வளவு என சொல்லவில்லை.

புறநகர் மற்றும் ஓரளவு பெரிய நகரங்களில் உள்ளவர்களில் 51% பேர் தங்களுடைய மாதாந்திர செலவு 30% மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வெறும் 7% பேர் மட்டுமே செலவு குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.  இந்த கணக்கெடுப்பிலும் எவ்வளவு சதவீகிதம் அதிகரித்துள்ளது என்பதை மீதமுள்ளவர்கள் சொல்லவில்லை.

பொதுவாக பலரும் வர்த்தகர்கள் அதிக பட்ச சில்லறை விலைக்கு மேல் ஜி எஸ் டி வரியை வசூலிப்பதாக கூறி உள்ளனர்.  முன்பு பல கடைகளில் கொடுத்து வந்த தள்ளுபடி விலை தற்போது ஜி எஸ் டி அறிமுகத்துக்குப் பின் நிறுத்தி விட்டதாக தெரிவிக்கின்றனர்.  பல வியாபாரிகள் ஜி எஸ் டி வசூலித்தாலும் அதற்கான சரியான பில் வழங்குவதில்லை என்னும் புகார் பரவலாக உள்ளது.

அரசு தரப்பில் ஜி எஸ் டி மூலம் வரி வருமானம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  அதே நேரத்தில் ஜி எஸ் டி வரிக்கான கணக்குகளை இன்னும் சில வணிகர்கள் அளிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.  மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சுதந்திரத்துக்குப் பின் இப்போதி வரி வருமானம் உயர்ந்துள்ளதாகவும் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.95000 கோடி வரி வருமானம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.  ஆனால் ஜி எஸ் டி கவுன்சிலின் கூற்றுப்படி, அதில் ரூ.62000 கோடி வர்த்தகர்கள் ஏற்கனவே செலுத்திய வரி என்பதால் திருப்பி அளிக்க வேண்டும் எனவும், நிகர வருமானம் ரூ.33000 கோடி மட்டுமே என தெரிய வந்துள்ளது.

இந்த விலை உயர்வு அதிகரித்துக் கொண்டே செல்வது நிச்சயம் வரும் 2019ஆம் வருட தேர்தலில் ஆளும் பா ஜ க வுக்கு எதிர்மறையான முடிவுகளை தரலாம் என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.