புனே:
தலித் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் ரம் குடிக்கலாம் என்று மத்திய இணை அமைச்சர் அதவாலே கூறினார்.
மத்திய சமூக நிதி மற்றம் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான அதவாலே நிருபர்களிடள் கூறுகையில், ‘‘ராணுவப் படைகளில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் தலித் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்த சமுதாயம் நாட்டிற்காக சண்டையிட்டு உச்ச தியாகத்தை அளிக்க தயாராக இருக்கிறது. ராணுவத்தில் இணையாத பலர் தியாகியாக உள்ளனர்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘சாலை விபத்துக்கள், மாரடைப்புகளில் பலர் உயிரிழக்கிறார்கள். ராணுவத்திற்கு செல்வதன் மூலமே தியாகி ஆகி விடலாம் என்று தலித் இளைஞர்கள் நினைக்க கூடாது. அதோடு நாட்டு சாராயத்தை குடிப்பதற்கு பதிலாக ரம் கிடைக்கும் ராணுவத்தில் தலித் இளைஞர்கள் இணைய வேண்டும். அதோடு சாப்பிடுவதற்கு நல்ல உணவு கிடைக்கும்.
தலித் சமுதாயத்தில் இருந்து அதிகபட்ச இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும். ராணுவத்தில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எங்களது கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இது தொடர்பாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசுவோம். மும்பை ரெயில் நிலைய நடை மேம்பாலத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவறு செய்த ரெயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.