குவைத் நாட்டில் வசித்துவந்த 15 இந்தியர்களின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.
மேலும் இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று 119 இந்தியர்களின் தண்டனைகளையும் குவைத் மன்னர் ஜாபர் அல் அஹ்மத் குறைத்துள்ளார்.
குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ள இந்தியர்கள் பலர், அங்கு பல்வேறு குற்றச்சாட்டு களுக்கு ஆளாகி அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிக்க, இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து இந்திய அரசு, குவை அரசிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், குவைத் மன்னர் ஜாபர் அல் அஹ்மத் 15 இந்தியர்களின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 119 இந்தியர்களின் தண்டனையைக் குறைத்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , இதற்காக குவைத் மன்னருக்கு ட்விட்டர்மூலம் நன்றியும் தெரிவித்துள்ளார்.
மேலும், குவைத் நாட்டுச் சிறையிலிருக்கும் இந்தியர்களை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.