சென்னை,
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஓராண்டுக்குப் பின்னர் தமிழகத்துக்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போதுள்ள இக்கட்டான சூழலில் பன்வாரிலால் நியமனம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு யூகங்களுக்கு அடிகோலி உள்ளது.
தமிழக கவர்னராக இருந்து ரோசய்யா பதவி காலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ந்தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செய லாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு 3 மாத காலம் அரசு முடங்கிய நிலையிலேயேதான் இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி ஜெ. மறைவை தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு முதல்வராக பதவியேற்றார். தற்போது வரை தமிழக அரசு மத்திய அரசின் உத்தரவுக்கு செவிமடுத்து தலையாட்டி பொம்மையாகவே செயல் பட்டு வருகிறது.
தமிழகம் கவர்னரின் முழு கட்டுப்பாட்டில்தான் தமிழக அரசு இயங்கி வருகிறது.
இதற்கிடையில் அதிமுகவும் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகள் அரங்கேறி உள்ளன.
அதிமுக உடைந்ததன் காரணமாக அதிமுக என்ற கட்சி பெயரும், இரட்டை சிலை சின்னமும் மத்திய அரசின் தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரிந்த அதிமுக அணிகளான ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் சமீபத்தில் இணைந்து ஓபிஎஸ் துணை முதல்வராக பதவியேற்றார். அப்போது ஓபிஎஸ்-ஐயும், இபிஎஸ்-ஐயும் கவர்னர் வித்யாசாகர் ராவ் இணைத்து வைத்தார்.
ஓபிஎஸ் அணி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தரப்பினர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, எடப்பாடி மீது நம்பிக்கை யில்லை, அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், கவர்னர் ராவ், இது உட்கட்சி விவகாரம், நான் தலையிட முடியாது என்று கூறி விட்டார்.
இதுபோன்ற சூழலில், எடப்பாடி அரசு சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை கோர வேண்டும் என்றும் அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து திமுகவும் இரண்டு முறை கவர்னரை சந்தித்து மனு கொடுத்தது. மேலும் ஜனாதிபதியை சந்தித்தும் மனு கொடுத்தது.
இந்நிலையில், எடப்பாடி தலைமையிலான அரசு சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட, கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், கவர்னர் சார்பாக, அவரது செயலாளர் விளக்கம் அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த வழக்கும் இன்னும் ஒருசில நாட்களில் விசாரணைக்கு வர இருக்கிறது.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், பன்வாரிலாலை தமிழக கவர்னராக நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையையும், தமிழக அரசியல் கட்சியினரையும் புதிய கவர்னர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பன்வாரிலால் இந்துத்துவாவில் உள்ள அதிக ஈடுபாடு காரணமாக பல கட்சிகள் தாவியுள்ள பன்வாரிலால், தமிழகத்தில் நிலவி வரும் மதசார்பற்ற அமைதியான அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பது போக போகத்தான் தெரியும்.
இதுவரை மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும தமிழகத்தில், மத துவேஷத்தை தூவுவாரா, அல்லது மக்களின் மனநிலை அறிந்து செயல்படுவாரா என்பது போக போகத்தான் தெரியும்.
பன்வாரிலால் நியமனம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.