டில்லி: தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஆளுநர் ரோசையா ஓய்வு பெற்ற பிறகு, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்துவந்தார். பல கட்சித் தலைவர்களும், தமிழகத்துக்குத் தனி ஆளுநர் நியமிக்காதது குறித்து விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோஹித்தை தமிழக ஆளுநராக நியமித்து உள்ளார். 77 வயதான பன்வாரிலால் , மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர். நாக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக மூன்று முறை இருந்தவர்.
பார்வர்டு பிளாக், காங்கிரஸ் ஆகிய கட்சியில் இருந்த பன்வாரிலால் பின்னர் பாஜகவில் சேர்ந்தார். இடையில் தனிக்கட்சியும் துவங்கி நடத்தினார்.
2016ல் அஸ்ஸாம் ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டார். 2017ல் மேகாலயா மாநில ஆளுநர் பொறுப்பு பன்வாரிலாலுக்கு கூடுதலாக தரப்பட்டது.
5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்..
தமிழ்நாடு, அசாம், பீகார், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அசாம் ஆளுநராக ஜகதீஷ் முகி, பீகார் மாநிலத்திற்கு சத்தியபால் மாலிக், மேகாலயா ஆளுநராக கங்கா பிரசாத், அருணாச்சல பிரதேசத்தின் ஆளுநராக பி.டி.மிஸ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திரகுமார் ஜோஷி நியமிக்கப்பட்டு இருக்கிறார். .