டில்லி,
தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 73வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இன்றைய போராட்டத்தின்போது, தமிழக விவசாயிகள் பிரதமர் மோடியின் வீடு அருகே சென்று போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தலைநகர் டில்லியின் ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தின்போது மோடி, விவசாயிகளின் கோவணத்தை உருவுவதாக நடித்துக்காட்டியும், ஓடுகள் எலும்புகளை தின்றும், இலைதழைகளை அணிந்தும், தொழு நோயாளிகள் போன்று வேடமிட்டும், மண்சோறு சாப்பிட்டும், சாமியார் போன்றும் என நூதன முறையில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஜந்தர்மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகளை அங்கிருந்து செல்லும்படி 3 முறை டில்லி போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் தண்ணீரை தடுத்தும் தொல்லை கொடுத்தனர்.
இந்நிலையில், டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் மனு கொடுக்க சென்றனர். அவர்களுக்கு அனுமதி மறுத்ததால், அவரது இல்லம் முன் தமிழக விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறிய போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் போராடத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.