அகமதாபாத்:
குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல்காந்தி, “பாஜக அரசு மக்களை ஏமாற்றுகிறது” என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தற்போது பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜய் ரூபானி முதல் அமைச்சராக இருக்கிறார். இங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது.
இதற்கான ஆயத்த வேலைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலுக்குச் சென்று வழிபட்டு ராகுல், தனது பிரசாரத்தைத் தொடங்கினார். ராகுலை வரவேற்ற கிராமத்தினர் பாரம்பர்யமான மாட்டு வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அதன்பின்னர் ஜாம்நகர் மாவட்டத்தில் ஜாம்நகரில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசும்போது, ‘குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி வருவதற்கான சூழல் நிலவுகிறது. மக்கள் மாற்றத்தையே விரும்புவதால் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கும். இங்கு ஆளும் ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தற்போதைய ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தனியார் மயமாகப்பட்டு வருகின்றன. அரசின் இந்தக் கொள்கையால் ஏழை எளிய மக்கள் கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெற இயலாமல் போகிறது. இந்த ஆட்சியில் வர்த்தக முதலாளிகளுக்கு மட்டுமே ஏராளமான கடன் அளிக்கப்படுகிறது.
ஆனால் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில்லை. வர்த்தக முதலாளிகள் அனைத்துப் பலன்களை யும் பெறுகின்றனர். பயிர்க்கடன் செலுத்தாத விவசாயிகளுக்குச் சிறை தண்டனை தான் கிடைக்கிறது. விவசாயிகள் யாரும் செல்போனிலோ அல்லது டெபிட் கார்டிலோ பணப் பரிமாற்றம் செய்வதில்லை. அவர்கள் பணம் கொடுத்துதான் விதைகளை வாங்குகின்றனர்” என்று ராகுல்காந்தி பேசினார்.