மணிலா, பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் அதிபர் இல்லத்தின் அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது எனவும் அதிபர் பத்திரமாக இருக்கிறார் எனவும் செய்திகள் வந்துள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக கடந்த வருடம் முதல் ரோட்ரிகோ டூடெர்ட் பொறுப்பேற்று வருகிறார். இவர் பதவி ஏற்றதில் இருந்து ஊழலையும், குற்றங்களையும் ஒழிப்பதாக தெரிவித்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் முக்கியமானது போதை மருந்து கடத்தல்காரர்களை அழிப்பது ஆகும்.
ஆனால் போதை மருந்து கடத்தல்காரர்கள் என்னும் பெயரில் கொல்லப்பட்ட 3500 பேர்களில் பல அப்பாவிகளும் இருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் அதிபருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் அதிபர் ரோட்ரிகோவின் வீடு அமைந்துள்ள மலகனாங்க் பூங்கா பகுதியில் நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். முழுமையான தகவல்கள் இன்னும் வரவில்லை. அதிபரின் காவல் அதிகாரி மைக் அக்வினோ அதிபர் துப்பாக்கி சூடு நடந்த சமயத்தில் அவர் இல்லத்தில் இல்லை எனவும் அவர் பத்திரமாக இருக்கிறார் எனவும் கூறி உள்ளார்.