அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குஜராத்தில் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.

தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக குஜராத் வந்த ராகுல்காந்திக்கு மாநில காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏற்கனவே குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி, ராஜீவ்காந்தி உள்பட மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், தற்போது ராஜீவ் காந்தி தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பாரதியஜனதாவின் கோட்டையான  குஜராத்தில் தற்போதுவிஜய் ரூபானி முதல்வராக இருந்து வருகிறார். ஆனால், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதாவின் வெற்றி வாய்ப்பு சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அரசுக்கு எதிராக ஹிர்திக் படேல் தலைமையிலான படேல் மக்களின் போராட்டமும், உனா நகரில் பசுவதையை காரணம் காட்டி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தன மான தாக்குதலையடுத்து தலித் மக்கள் வெகுண்டெழுந்து நடத்திய மாபெரும் போராட்டம் ஆகியவை குஜராத்தில் பாரதியஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இந்த சமயத்தில் ராகுல்காந்தி தற்போது தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி இருப்பது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தேர்தல் பிரசாரத்தையொட்டி ராகுல்காந்தி மாட்டுவண்டியில் சென்று கிராம மக்களிடம் பிரசாரம் செய்தார்.

கிராமம் தோறும் செல்லும் ராகுல்காந்திக்கு அந்த பகுதி கிராமத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அப்போது கிராம மக்களிடம் அமர்ந்து ராகுல்  சிற்றுண்டி அருந்தினார். பொதுமக்களிடம் அவர் சாதாரணமாக உரையாடினார்.

ராகுல்காந்தியின் எளிமையான நடவடிக்கை கிராம மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் செல்லும் பகுதிகளில் மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ராகுல்காந்திக்கு மக்கள் அளித்து வரும் வரவேற்பு பாரதிய ஜனதாவினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.