சோளிங்கர்,
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் அவரது சிகிச்சை மற்றும் மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைச்சர்களே கூறி வருகின்றனர்.
சமீபத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கும்போது இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னதாகவும், அப்படி கூறச்சொன்னார்கள் அதனால் கூறினோம் என்று கூறினார்.
இந்நிலையில், தற்போது மற்றொரு அமைச்சரான கே.சி.வீரமணி, சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம் என்றும் கூறி உள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது சிகிச்சை பெற்று வரும் படங்களோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. ஆனால் அதிமுக அமைச்சர்கள் ஜெய லலிதா நன்றாக இருக்கிறார்.. சாப்பிடுகிறார்.. விரைவில் வீடு திரும்புவார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று தினசரி ஒவ்வொரு பொய்யாக கூறி வந்தனர்.
அதற்கேற்றார்போல் மத்திய அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பொய்களையே கட்டவிழ்த்து வந்தனர்.
அதற்கேற்றார் போலவே, ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக அப்போலோவும் அறிக்கைகளை விட்டது.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜெ.அண்ணன் மகனான தீபக், ஜெ. மூன்று நாட்கள் மட்டுமே சுயநினைவோடு இருந்தார் என்று கூறி உள்ளார்.
இந்நிலையில், தற்போது அதிமுகவில் ஏற்பட்ட உச்சக்கட்ட மோதல் காரணமாக ஜெ.சிகிச்சை குறித்த மர்மம் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
இதுவரை ஜெ. சிகிச்சை குறித்த படமோ, வீடியோவோ இல்லை என்ற சசிகலா குடும்பத்தினர் தற்போது, ஜெ. சிகிச்சை பெற்று வந்ததை சசிகலா வீடியோ எடுத்தார் என்று டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று வேலூர் அருகே சோளிங்கரில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, எங்களைப்பற்றி சசிகலா ஜெயலலிதா விடம் போட்டுக் கொடுத்துருவாங்கனு பொய் சொன்னோம், சசிகலாவில் ஏற்பட்ட பயணமா காரணமாக பொய் சொல்ல வேண்டியதாயிற்று என்று அமைச்சர் கே.சி. வீரமணி கூறியுள்ளார்.
மேலும், “ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பா இருப்போம்னு சொன்ன சசிகலா, அவர வெளிநாட்டுக்கு அழைச்சுட்டு போய் ஏன் சிகிச்சை அளிக்கல. அப்போலோல நாங்க யாரும் ஜெயலலிதாவ பார்க்கல. உடம்பு சரியாகி ஜெயலலிதா வந்தால், சசிகலா எங்களப்பத்தி அவங்கக் கிட்ட போட்டுக் கொடுத்துரும்னுதான் பயத்தாலதான் அவங்க (சசிகலா) சொன்னத அப்டியே வெளிய வந்து சொன்னோம் என்று பேசினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஒவ்வொருவரும் தற்போது ஒவ்வொரு விதமாக தகவர்லகளை கூறி வருவதால் ஜெயலலிதா உண்மையிலேயே சசிகலாவால் கொல்லப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகம் மேலும் வலுவடைந்து வருகிறது.