டில்லி

புகழ்பெற்ற பத்திரிகையான தி எகனாமிக் டைம்ஸ் இன்று இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.  அந்தக் கட்டுரையில் காணப்படுவதாவது :

”கடந்த நவம்பர் மாதம் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.  அதற்கு பதில் புதிய ரூ.500 நோட்டுக்களும்,  ரூ.2000 நோட்டுக்களும் வெளியிடப்பட்டன.  அப்போது முதல் டிஜிட்டல் பேமண்ட் பரவலாக்கப் பட்டது.

தற்போது முகேஷ் அம்பானியால் நடத்தப்படும் ரிலையன்ஸ் நிறுவனம் புதியதாக வங்கியை துவக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.  ஏற்கனவே ஜியோ பேமெண்ட் வங்கி செயலில் உள்ளது.  தற்போது துவங்கப்படும் வங்கி முழுக்க முழுக்க ஆன்லைனில் செயல்படும் என சொல்லப் படுகிறது.  எனவே அதற்கு ஊழியர்கள் அதிகம் தேவைப்பட மாட்டார்கள்.  ரிலையன்ஸ் கடைகளில் மொபைல் ஃபோன் விற்கும் ஊழியர்களே அந்த வங்கியின் செயல்பாட்டை சொல்லிக் கொடுக்க முடியும்.  இதனால் வளர்ந்து வரும் நிறுவனமான எஸ் வங்கி தனது ஊழியர்களில் 12% பேரை வேலையில் இருந்து நீக்கி உள்ளது.

வங்கியில் சுமார் 500 பேர் செய்யும் வேலையை வெறும் 50 பேர் மூலம் ஆன்லைன் வங்கிச் சேவை மூலம் முடித்து விட முடியும்.  எனவே டிஜிட்டல் பேமெண்ட் என்பது ஏற்கனவே வங்கிகளில் உள்ள வேலைவாய்ப்பை குறைப்பதுடன்,  புதிய வேலைவாய்ப்புகள் உண்டாவதையும் நிறுத்திவிடும்.  அத்துடன் கூகுள் தனது டிஜிட்டல் பேமெண்ட் சேவையை தொடங்கி உள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆசிய நாடுகளில் மிகவும் விரும்பப்பட்டு வந்த கரன்சியான ரூபாய் கடந்த 2 ஆண்டுகளாகவே மதிப்புக் குறைந்து வருகிறது.  இதனால் முதலீடு செய்பவர்கள் மிகவும் யோசனை செய்து வருகின்றனர்.  ரியல் எஸ்டேட் துறையும் டிஜிட்டல் பேமெண்டினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  அது தவிர பல அமைப்பு சாரா வர்த்தகங்களும் ரொக்க பரிவர்த்தனையில் நடந்து வந்தது.  தற்போது டிஜிட்டல் பேமெண்ட் பெருகி வரும் நிலையில் அந்த வர்த்தகங்களும் பாதிப்புக்குள்ளாகின்றது.

வங்கியின் கடன் வழங்கும் கொள்கையில் தற்போது மாறுதல் ஏற்படுத்தப் பட்டுள்ளது.  அதனால் பல சிறு மற்றும் குறும் தொழில்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.  சிறு மற்றும் குறும் தொழில்களில் பணி புரிவோர் ஊதியங்கள் ரொக்கமாக வழங்கப் பட்டு வரும் நிலையில் டிஜிட்டல் பேமெண்ட் என்பது பல தொழிலாளர்களுக்கு இன்னும் புரியாத நிலையில் உள்ளது.  தெரு ஓரத்தில் பழைய பொருட்களை பொறுக்கி விற்பவரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் இருந்து அவற்றை வாங்கி விற்கும் வியாபாரிகளும் டிஜிட்டல் பேமெண்ட் செய்பவர்கள் அல்லர்.

முடிவாக பிரதமர் மோடி எந்த நோக்கத்தில் டிஜிட்டல் பேமெண்ட் என்பதை அறிவித்தார் என்பது சரிவர தெரியாவிட்டாலும் இதனால் எஸ் வங்கி, ரிலையன்ஸ் போன்ற பெருமுதலாளிகளுக்கே இது பயனளிக்கும் என தெரிகிறது”

இவ்வாறு அந்த கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளது.