ன்று ரத்தத்தின் ரத்தங்கள் திசை தெரியாமல் தவிக்கின்றன. எதிர்காலம் சூனியமாகிவிட்டதோ என்ற பீதியில் அவர்கள். ஆனால் இதய தெய்வம் உண்மையிலேயே தெய்வமாகிவிட்டபோது அவரது ஆசி நம்மைக் காப்பாற்றும் என ஏன் அவர்கள் நினைக்ககூடாது?

இதயதெய்வமும் சரி, தெய்வமும் சரி, எல்லாமே ஒரு பம்மாத்துவேலை என்பது அ இஅதிமுக வினர் அனைவர்க்கும் நன்கு தெரியும். எனவேயே அவர்கள் கலக்கம்.

அரசியல் என்பது ஒரு பிழைப்பாகத்தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவ்வபோது ஓரிரு நம்பிக்கைக் கீற்றுக்கள் தோன்றும், ஆனால் தோன்றிய பொழுதிலேயே மறைந்தும் விடும். உலகு முழுமையிலுமே இதுதான் யதார்த்தம். சமூகங்களும் அந்த யதார்த்தத்தினை ஏற்றுக்கொண்டு தான் காலத்தை ஓட்டுகின்றனர்.

அந்த அளவில் ஜெயலலிதா ஒன்றும் யாருமே கண்டிராத அதிபயங்கரப் பிராணி அல்ல. ரொம்பக் கொச்சையாகச் சொல்லவேண்டுமென்றால், கருணாநிதி கோடு போட்டார், இவர் ரோடு போட்டார், அவ்வளவே. ஆனாலும் ஜனநாயக வக்கிரங்களின் ஓர் உச்சம் ஜெ.

அந்த அளவில் இப்போது ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கு யதேச்சாதிகாரத்திலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அகில இந்திய அண்ணா திமுக எனும் அமைப்பிற்கு அவரது மறைவு ஈடு செய்யமுடியாத இழப்புதான், இனி அக்கட்சிக்கு எதிர்காலம் ஏதுமிருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. ஆனாலும் தமிழக அரசியல் சூழல் சற்றேனும் ஆரோக்கியமாகும்.

இந்துத்துவாவை இந்தியாவின் ஆகப் பெரிய எதிரியாகக் கருதும் பலர் எப்போதடா மோடி ஆட்சி முடியும் என ஏங்கிக்கொண்டிருக்கலாம். அதுவும் மதவாதத்தால் அதிகம் பாதிக்கப்படாத தமிழ்நாடும் அச் சகதியில் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கிருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவின் அரசியல் பாரம்பரியம் தொடரும் ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறிந்ததற்காக நாமனைவரும் பாரதீய ஜனதாவிற்கு, குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடமைப் பட்டிருக்கிறோம்!

சசிகலா மட்டும் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்படாமலிருந்திருந்தால் இந்நேரம் அவர்தான் முதல்வராயிருந்திருப்பார். மன்னார்குடி சொந்தங்களின் சாம்ராஜ்ஜியம்தான். நான்காண்டுகளுக்குப் பிறகு என்னவாயிருந்திருக்கும் என்பது வேறு. ஆனால் தமிழக அரசியல் மேலும் அதலபாதாளத்தை நோக்கிப் பயணித்திருந்திருக்கும்.

மோடியை சாடுபவர்கள் சற்று நிதானிக்கவேண்டும். மன்மோகன் சிங்கால் இப்படி உறுதியுடன் செயல்பட்டிருக்கமுடியுமா? காங்கிரஸ் தலைமை அனுமதித்திருக்குமா?

உச்சநீதிமன்றத் தீர்ப்புடன் மத்திய அரசைத் தொடர்புபடுத்துவானேன் என்று அரசியல் தெரிந்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன் வேறுவித அரசியல் சூழலில் இப்படி ஒரு தீர்ப்பு கிடைத்திருக்காது.

ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறை, அ இஅதிமுகவில் பிளவு அனைத்துமே சுவாரசியமான திருப்பங்கள், ஜனநாயகத்திற்கும் நல்லது.

ஜெயலலிதா முதல்வராகத் தொடர்ந்திருந்தால் அது மாநில சுயாட்சிக்கு நன்மை பயந்திருக்கும், நீட், ஜி எஸ் டி, இன்னும் பலவற்றில் என்று சிலர் கருதுகின்றனர்.

ஆனால் மாநில அதிகாரத்தையல்ல, தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதில்தான் எப்போதுமே ஜெயலலிதாவின் கவனம் என்பதை மறக்கலாகாது.

அவர் அப்பட்டமான சந்தர்ப்பவாதி, ஆனால் தான் ஏதோ மாநில உரிமைகளுக்காகப் போராடுவதாக ஒரு பிம்பத்தைக் கட்டியமைப்பதில் வெற்றி பெற்றிருந்தார்.

1991ஆம் ஆண்டு முதல்வரானபோது அவர் தன்னை விடுதலைப் புலிகளுக்கெதிரனவராகக் காட்டிக்கொண்டிருந்தார். பிரபாகரனை எதிர்த்து நிறைவேற்றப்பட்ட சட்ட மன்றத் தீர்மானம் கூட ஒரு ஸ்டண்டுதான், ஆனால் களத்தில் அப்பாவி இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எத்தனை நெருக்கடிகள் கொடுத்தார்? ஏறத்தாழ 33,000பேர் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். பல முனை சிவில் சமூக அழுத்தத்தின் பின்னர்தான் அந்தத் திருப்பி அனுப்பல் படலம் நிறுத்தப்பட்டது.

இலங்கைத் தமிழர் ஒவ்வொருவரும் அப்போது குற்றவாளியாகவே பார்க்கப்பட்டனர். அவர்களைப் பயன்படுத்தி நரசிம்மராவ் அரசு வழிப்பறிக் கொள்ளைகளை அரங்கேற்றுவதாக சட்டமன்றத்தி லேயே பேசினார் ஜெயலலிதா. இதே தலைவிதான் பின்னொரு கட்டத்தில் ஈழத்தாயானார். முன்னர் இவர்களை வெளியேற்றி னால்தான் நிம்மதி என்றவர் ஏன் பின்னர் தொப்புள்கொடி உறவுகளுக்காக அப்படி ஏன் உருகவேண்டும்? தனக்கு எது சாதகமென நினைக்கிறாரோ அதைத் தயங்காமல் செய்வார், அதுவே அவர் குணாதிசயம்.

மாநில சுயாட்சி என முழக்கமிட்டவர் பின் மோடி ஏதாவது மிரட்டினால் சரணடைந்திருப்பார்.

இன்னொரு பரிமாணத்தையும் நாம் கவனிக்கவேண்டும். சனாதன இந்து மதம் பரந்துபட்ட மக்களின் நலனுக்கெதிரானது என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். அதற்கு அதிக வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சனாதனத் தலைமையை தமிழ்ச் சமூகம் நிராகரித்து வந்திருக்கிறது.

பிராமணர்கள் மட்டுமே கருவறைக்குள் நுழையமுடியும் என்ற நிலையை பெரும்பான்மை பிராமணரல்லாதார் ஏற்றுக்கொண்டிருக்கலாம், ஆனால் குருக்களுக்கு சன்னிதானத்தில் மட்டுமே மரியாதை. வெளியே அவர்கள் குருவாக, ஆசிரியராக, போதகராக அங்கீகரிக்கப்படவில்லை. இன்னுஞ்சொல்லப்போனால் எள்ளி நகையாடப்பட்டனர்.

வட இந்தியாவில் சனாதன இந்துத் தலைவர்கள் இஸ்லாமியரை எதிரிகளாக அடையாளப்படுத்துகின்றனர், மக்களும் அத்தகைய வக்கரிப்புக்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான். ஆனால் தமிழகத்தில் அப்படியல்லவே. அடிப்படைவாதம் பலரை முகம் சுளிக்கவைத்தாலும் முஸ்லீம்களை பரம வைரிகளாகப் பார்ப்பதில்லை. நல்லிணக்கம் அந்த அளவு வேரூன்றியிருப்பதற்கு திராவிட இயக்கமும் ஒரு முக்கிய காரணம்.

பாபர் மசூதி தகர்க்கப்படும் முன்னரேயே அங்கே கோயில் கட்டவேண்டும் எனக் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. இன்று அகில இந்திய அளவில் இந்துத்துவ சக்திகள் அசுரவளர்ச்சியடைந்துவரும் நிலையில், ஜெ போன்ற ஒருவர் முதல்வராகத் தொடர்ந்திருந்தால், தமிழகம் என்ன ஆகியிருக்கும் என்பதை யோசிக்கவேண்டும்.

எஞ்சியிருக்கும் அ இஅதிமுகவின் மீது சவாரிசெய்து  சட்ட மன்றத்தில் அல்லது நாடாளு மன்றத்தில் ஏதோ சில இடங்களைப் பெறுவதில் பாஜக வெற்றி அடையும் வாய்ப்பு இல்லை என உறுதியாகக் கூறமுடியாதுதான். ஆனால் ஜெ முதல்வராகத் தொடர்ந்திருந்தால் மக்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாரதூர மாற்றங்கள் பல மடங்கு ஆபத்தாய் அமைந்திருக்கும். அதிலிருந்து நாம் தப்பியிருக்கிறோம்.