டில்லி:
ஐ.நா பொதுச் சபையின் 72வது அமர்வில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் பேசுகையில், ‘‘பயங்கராவதிகளின் முதன்மை ஏற்றுமதி தளமாக பாகிஸ்தான் விளங்குகிறது. உலகமே பெருமை கொள்ளும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை நாங்கள் ஏற்ப டுத்தியுள்ளோம்.
ஆனால், பாகிஸ்தான் இந்த உலகுக்கு என்ன பங்களிப்பை அளித்துள்ளது. பயங்கரவாதத்தை தவிர அவர்களின் சொந்த மக்களுக்கே எதுவும் செய்யவில்லை. அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், டாக்டர்கள், என்ஜினியர்களை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை தான் உருவாக்கியுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெயிஷ் இ முகமமது. ஹிஸ்புல் முஜாகிதீன், ஹக்கானி நெட்வொர்க் போன்ற தீவிரவாத அமைப்புக்கு முகாம்களை தான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது’’ என்றார்.
சுஸ்மா ஸ்வராஜின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது என்பதை தெரிவித்த அவரை காங்கிரஸ் பாராட்டியுள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கடுமையான உண்மைகளை சுஸ்மா எடுத்துக் கூறியுள்ளார்.
கடந்த 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சானைகளை அவர் ஐநா பொது சபையில் பிரதிபலித்துள்ளார். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தான் இந்தியாவின் மந்திரம் என்பதை எடுத்தக் காட்டியுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் சுஸ்மா ஸ்வராஜூக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘இறுதியில் காங்கிரஸ் அரசு எத்தகைய சிறந்த நோக்கத்துடன், ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது என்பதை சுஸ்மா ஐநா சபை கூட்டத்தில் அங்கிகரித்துள்ளார்’’ என தெரிவித்துள்ளார்.