டில்லி
அனைத்து வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் வைத்து டிக்கட் முன்பதிவு செய்யலாம் என ஐ ஆர் சி டி சி அறிவித்துள்ளது.
முன்பு ஒரு காலத்தில் ரெயில் டிக்கட் எடுக்க வேண்டும் எனில் ரெயில் நிலையத்துக்கு சென்று தான் எடுக்க வேண்டும் என இருந்தது. தற்போது அனேகமாக அனைத்து டிக்கட்டுகளும் இணைய தளத்தின் மூலமே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இணைய தளத்தில் டிக்கட் முன்பதிவு செய்யும் போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்த சேவைக் கட்டணம் வங்கிக் கணக்கில் இருந்து பிடிக்கப்பட்டது.
ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது ஐ ஆர் சி டி சி சேவைக் கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்தன. அதற்கு இந்தியன் வங்கி உட்பட சில வங்கிகள் ஒத்துழைப்பு அளித்த போதிலும் சில வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பிறகு ரிசர்வ் வங்கி தற்காலிகமாக ரூ.1000 வரை டிக்கட் வாங்கினால் 0.5%, ரூ.1000லிருந்து ரூ.2000 வரை 05.%, மற்றும் ரூ.2000 க்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 1% எனவும் சேவைக் கட்டணத்தை மாற்றி அமைத்தது.
அதன் பின் ஃபிப்ரவர் 16ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் சேவைக் கட்டணம் மாற்றப்பட்டது. இந்த கட்டண வசூலிப்பில் வங்கிகளுக்கும் ஐ ஆர் சி டி சி தளத்துக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டது. அதன் பிறகு இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, செண்டிரல் வங்கி, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் டெபிட் கார்டுகள் மூலமே இணையத்தில் முன்பதிவு செய்யப்பட முடியும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ரெயில் டிக்கட் முன்பதிவுக்கு இணைய தளத்தில் அனைத்து ஏ டி எம் கார்டுகளையும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இப்போது ஐ ஆர் சி டி சி வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த ஒரு வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் தடை இல்லை என கூறப்பட்டுள்ளது.