டில்லி:

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின் பதவி காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டி க்கப்பட்டுள்ளது. இவரது 3 ஆண்டு பதவிக்காலம் வரும் அக்டோபர் 16ம் தேதியுடன் முடிவடைகிறது.

இவர் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் வலது கரமாக கருதப்படுகிறார். 2013ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் நியமனம் செய்யப்பட்ட பின் இப்பதவி ஓராண்டு காலியாக இருந்தது. அதன் பின் தான் அரவிந்த் சுப்ரமணியன் இந்த பொறுப்பை ஏற்றார்.

கடந்த ஜனவரி 31ம் தேதியிட்ட பொருளாதார சர்வேயில் பணமதிப்பிழப்புக்கு பின் நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் சுப்ரமணியன் கவனம் செலுத்துவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு உலகளாவிய அடிப்படை சம்பள திட்டத்திலும் அவரது கவனம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜ மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இவரை விமர்சனம் செய்திருந்தார். ஜிஎஸ்டி.யில் காங்கிரஸ் நிலைப்பாடு மற்றும் அறிவுசார் சொத்துரிமை நிலைப்பாட்டிலும் சுப்ரமணியனை அவர் விமர்சனம் செய்திருந்தார். அப்போது மத்திய நிதியமைச்சர் இதில் தலையிட்டு நிதியமைச்சக அதிகாரி மீதான இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறி அரவிந்த் சுப்ரமணியனை பாதுகாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ம் ஆண்டில் உலகளவிலான வெளிநாட்டு கொள்கை சிந்தனையாளர்களின் 100 பேர் கொண்ட பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார். பதவி நீட்டிப்பு குறித்து அரவிந்த் சுப்ரமணியன் கூறுகையில், ‘‘ சவால்களை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.