மெக்சிகோ:

ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மெக்சிகோ சமீப காலமாக இயற்கை பேரிடரிலும் பெருமளவில் சிக்கி தவித்து வருகிறது. மெக்சிகோ மற்றும் சுற்று வட்டார மாநிலங்களில் கடந்த 19ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கனோர் பலியாகியுள்ளனர். பல கட்டடங்கள் தரைமட்டமாயின.

இது தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டு வருகின்றனர். தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்பத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதனால் மீட்டு பணியை விரைந்து மேற்கொள்ளும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. எவ்வளவு தான் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் நமக்கு இயற்கையாக கிடைத்த சில சக்திகளை நம்பித்தான் இருக்க வேண்டிய நிலை நீடிக்க தான் செய்கிறது. மெக்சிகோ பேரிடரிலும் இது உண்மையாகியுள்ளது.

ஆம்.. மீட்பு பணியில் ராணுவத்தின் நாய் படையும் களம் இறங்கியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மோப்ப சக்தி மூலம் கண்டறிய மீட்பு படையினருக்கு 7 வயதாகும் ஃப்ரைடா என்ற லேப்ரடார் பெண் துப்பறியும் நாய் கடந்த 2 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் முகாமிட்டு பெரும் உதவி செய்து வருகிறது.

ராணுவத்தின் நாய் பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த ஃப்ரைடா பல பேரிடர்களில் பணியாற்றியுள்ளது. இதற்கு முன்பு வரை 50 பேரின் உயிரை இது காத்துள்ளது. கடந்த 7ம் தேதி தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேரை ஃப்ரைடா காப்பாற்றியுள்ளது.

தெளிவான பார்வைக்கு ஏற்ற முகமூடி, கால்களுக்கு பாதுகாப்பான கவசங்களுடன் ஃப்ரைடா இடிபாடுகளு க்குள் சிக்கியிருப்பவர்களை கண்டறிய உதவி வருகிறது. சமீபத்தில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 21 குழந்தைகள் உள்பட 25 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் ஃப்ரைடாவின் சிறப்பாக பணியாற்றி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஃப்ரைடாவின் பணி சமூக வளை தளங்களில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது வைரலாகி வருவதோடு, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. எனினும் மெக்சிகோவில் பலரும் இடிபா டுகளுக்குள் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்க ஃப்ரைடாவின் உதவி அதிகளவில் மீட்பு படையினருக்கு தேவைப்படுகிறது. இதனால் போதுமான ஓய்வுக்கு இடையே ஃப்ரைடா தனது கடமை ஆற்றிவருகிறது.