மும்பை
தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் தான் வசிக்கிறார் என அவர் சகோதரர் இக்பால் இப்ராகிம் கஸ்கர் போலீசாரிடம் கூறி உள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் பாகிஸ்தான் அதை மறுத்துள்ளது. தாவூதின் தம்பியான இக்பால் இப்ராகிம் கஸ்கர் மீது மிரட்டல் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.
தானே பகுதியை சேர்ந்த ஒரு கட்டுமான தொழில் அதிபரிடம் இவர் ரூ.30 லட்சம் ரொக்கமும் 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் தர வேண்டும் என மிரட்டி உள்ளார். தானே போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தெற்கு மும்பையில் வசிக்கும் அவர் சகோதரி இல்லத்தில் இருந்து கைது செய்தனர். அவருடைய கூட்டாளிகள் இருவரும் அவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்போது நடந்த விசாரணையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிக்கிறார் என்பதை கஸ்கர் தெரிவித்ததாக போலீசார் கூறி உள்ளார்கள். தாவூத் இப்ராகிம் நான்கு முதல் ஐந்து இடங்களில் மாறி மாறி வசிக்கிறார் எனவும், தொலைபேசி அழைப்புகளை போலீஸ் ஒட்டுக்கேட்கும் என்னும் அச்சத்தில் யாருடைய தொலைபேசி அழைப்பையும் அவர் எடுப்பதில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார். கஸ்கர் மேலும் விசாரணையில் தமது மற்றொரு சகோதரர அனீஸ் அகமதுவுடன் மட்டுமே தான் தொடர்பில் இருப்பதையும் அவர்கள் உறவினர் சோட்டா சகீலுடன் தொடர்பில் இல்லை எனவும் கூறி உள்ளார்.
கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகளை 8 நாள் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.