சென்னை,

டிடிவி ஆதரவு தென்காசி தொகுதி எம்.பி. வசதந்தி முருகேசன் இன்று திடீரென எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

சமீபத்தில் டிடிவி ஆதரவு எம்எல்ஏ ஜக்கையன் அங்கிருந்து விலகி எடப்பாடி தலைமைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், மீதமுள்ள டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சபாநாயகர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வசந்தி முருகேசன் எம்.பி. அங்கிருந்து விலகி, முதல்வர் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இன்றுகாலை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் தென்காசி தொகுதி அதிமுக மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன்  முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே டிடிவி அணியில் இருக்கும்போது,தினகரனும், சசிகலாவும் இணைந்து கட்சியை வழிநடத்தி செல்வார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி தலைமையிலான அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக,  டிடிவி அணியில் இருந்து ஒவ்வொருவராக ஓட்டம் பிடிப்பதால் செய்வதறியாமல்  தினகரன் திகைத்து வருவதாக கூறப்படுகிறது.