நியூயார்க்
ஐநா கூட்டத்தில் ட்ரம்ப் வடகொரியாவை எச்சரித்ததற்கு வட கொரிய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அணு ஆயுத சோதனை நடத்தும் வடகொரியாவை வன்மையாக கண்டித்தார். அவர், “அமெரிக்காவையோ, அல்லது கூட்டணி நாடுகளோ, வேறு எந்த நாட்டையோ வடகொரியா சீண்டினால், நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் என்னும் ராக்கெட் அதிபர் அணு ஆயுத சோதனையை தொடர்ந்தால் வட கொரியா முழுவதுமாக அழிக்கப்படும்” என தெரிவித்தார்.
அவரது இந்தப் பேச்சு வடகொரியாவை ஆத்திரம் மூட்டி உள்ளது. நேற்று முன் தினம் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ள வந்த வடகொரியா வெளியுறவு அமைச்ச ரி யாங் பேச்சில் அது எதிரொலித்தது. நிருபர்களிடம் அவர், “நாய்கள் குரைப்பதால் வடகொரியா அச்சம் அடையாது. அது ட்ரம்ப்பின் பகல் கனவுதான். எங்களுடைய ஆயுத சோதனை இந்த நாய் குரைப்பைக் கண்டு நிறுத்தப்பட மாட்டாது” என தெரிவித்துள்ளார்.
இன்று ஐ நா சபை பொதுக்கூட்டத்தில் ரி யாங் கலந்துக் கொண்டு உரையாற்ற உள்ளார். அப்போது ட்ரம்ப் பேசியதற்கு தனது எதிர்ப்பை அவர் தனது உரையில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.