வுகாத்தி

சாம் மாநில பா ஜ க பெண் பிரமுகர் பெனாசிர் அர்ஃபான் ரோஹிங்கியா இஸ்லாமியரை ஆதரித்து கருத்து வெளியிட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த கட்டிடப் பொறியாளர் பெனாசிர் அர்ஃபான்.  இவர் தனது பணியை ராஜினாம செய்து விட்டு கடந்த 2015 முதல் முழு நேரமாக பா ஜ க வில்  கட்சிப் பணி செய்து வருகிறார்.   சமீபத்தில் மியான்மரில் இருந்து ரோஹிங்கியா இஸ்லாமியர் பலரும் மியான்மர் ராணுவத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வங்க தேசத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.   இவர்களுக்கு ஆதரவாக முகநூலில் பெனாசிர் அர்ஃபான் பதிவுகள் இட்டார்.  தவிர ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்காக ஒரு பிரார்த்தனை கூட்டத்துக்கு பலருக்கும் அழைப்பு அனுப்பினார்.

அவருக்கு கட்சித் தலைமையிடம் இருந்து கட்சியின் அனுமதி இல்லாமல் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பற்றி முகநூலில் கருத்து பதிந்தது தவறு என்றும் ஒழுங்கு நடவடீக்கை ஏன் எடுக்ககூடாது என கேள்வியும் வந்துள்ளது.   இதற்கு அவர் அனுப்பிய பதில் கட்சித்தலைமைக்கு திருப்தி அளிக்காததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்துள்ளது.   இது கட்சியினரிடமும், சமூக ஆர்வலர்களிடமும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இது குறித்து பெனாசிர், “என் பதிலை ஏன் ஏற்கவில்லை என தெரியவில்லை.  எனது பதில் குறித்து விவாதிக்க என்னை அழைக்கவில்லை.  கடந்த வியாழன் அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட என்னை நேற்று கட்சியில் இருந்து விலக்கி உள்ளனர்.  இந்த செய்தி கூட எனக்கு வாட்ஸ் அப்பில் தான் அனுப்பப்பட்டுள்ளது.  இவர்களைப் பொறுத்த வரை பெண்கள் அவர்களுக்கு தேநீர் கொடுத்து பணிபுரிவதற்கு மட்டுமே தேவைப் படுகின்றனர்.   அதுவும் சிறுபான்மையினர் என்றால் உடனடியாக பழி வாங்கி விடுவார்கள்” என கூறினார்.

ஆனால் கட்சித் தரப்பில் பெனாசிர் மீது பல குற்றங்கள் உள்ளதாகவும், அவர் எதற்கும் சரியான பதில் சொல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.   மேலும் எந்தக் குற்றம் சொன்னாலும், அவர் உடனே தான் பெண் என்பதால் இப்படி சொல்வதாகவோ ,  அல்லது தான் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இப்படிச் சொல்வதாகவோ கூறி தப்பித்து விடுவார் என சொல்லப்படுகிறது.