திருவனந்தபுரம்:

கர்நாடக இசைக் கலைஞர் கே.ஜே.யேசுதாஸ் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞரும், பிரபல பின்னணி பாடகருமான, கே.ஜே.யேசுதாஸ் பத்மநாப சுவாமி கோவிலில் வழிபட அனுமதி கோரி கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வரும் 30ம் தேதி விஜயதசமி அன்று கோவிலுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக கோயில் நிர்வாக குழு கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதில் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.