மும்பை:
மகாராஷ்டிரா மாநில கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள சிவசேனா ஆளும் பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
‘‘விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை நாங்களும் பகிர்ந்து கொள்ள முடியாது’’ என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக பாஜக மீது சிவசேனா கடும் தாக்குதலை தொடுத்து வருகிறது. அதோடு பெட்ரோல். டீசல் விலை உயர்வால் பாதித்துள்ள மக்கள் பிச்சை எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியிருப்பதாக கருத்து தெரிவி க்கப்பட்டுள்ளது. நாட்டில் விவசாயிகள் தற்கொலைக்கு பெட்ரோல் விலை உயர்வு தான் காரணமாக அமை ந்துள்ளது. சரக்கு போக்குவரத்து பாதித்த அதிர்ச்சியில் தான் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டனர் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
இதேபோல் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனா தலையங்க பக்கத்தில், ‘‘தங்களது பாக்கெட்டில் இருந்து செலவு செய்து பெட்ரோல், டீசல் போடாததால் அமைச்சர்கள் விலை உயர்வை நியாயப்படுத்துகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோது மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி ராணி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தெருக்களில் இறங்கி எப்படி போராட்டம் நடத்தினார்கள்.
புல்லட் ரயிலுக்கு செலவிடப்படும் தொகையை பணவீக்கத்தை குறைக்க பயன்படுத்த வேண்டும். இந்த நாடு பணவீக்கம் மற்றும் வேலையில்லாமை போன்றவற்றால் பெரிது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் புல்லட் ரயில் திட்டத்தை பாராட்டுபவர்களை மனநல மருத்துவமனைக்கு தான் அனுப்ப வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.