டில்லி:

குறைந்த பட்ச தொகை இல்லாத சேமிப்பு கணக்குகளுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடியை வசூல் செய்து, இதில் குறிப்பிட்ட தொகையை ஆதார் இணைப்புக்கு செலவு செய்ய எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

இது குறித்து எஸ்பிஐ நிர்வாக இயக்குனர் ராஜ்னிஷ் குமார் கூறுகையில், ‘‘டிசம்பர் 31ம் தேதிக்குள் சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்துவதற்கு அதிகளவில் செலவாகிறது. ஏற்கனவே கேஒய்சி என்ற வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள் என்ற திட்டத்தை பராமரிப்பதற்கு குறிப்பிட்ட தொகை செலவாகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இவை உள்பட ஏடிஎம், வர்த்தக தொடர்புகள் போன்றவை மூலம் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வாடி க்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதன் மூலம் ரூ. 2 ஆயிரம் கோடி நிதி திரட்ட எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.

சேமிப்பு கணக்குகளை பராமரித்தல், கேஓய்சி பூர்த்தி செய்தல் போன்றவை எளிதான இலக்கு கிடையாது. தற்போது ஒவ்வொரு சேமிப்பு கணக்குடன், ஆதார் எண்ணை டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எஸ்பிஐ வசம் உள்ள 40 கோடி சேமிப்பு கணக்குகளுடன் இதை இணைப்பதற்கு அதிப்படியான செலவு ஏற்படும். இதற்கு வங்கி வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள வேண்டும். அதை நடைமுறைபடுத்த வேண்டும். வருமான வரி பிரிவில் மாற்றம் செய்ய வேண்டும் ’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஆதார் எண்ணை சேமிப்பு கணக்குடன் இணைக்க தவறினால் கணக்கு செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் உள்ளது. ஏற்கனவே தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்ய அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சேமிப்பு கணக்குகளை பராமரிக்க தொழில்நுட்ப ரீதியில் பல அதிக முதலீடுகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்த செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுபோன்ற செலவுகளால் ரூ. 400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தக தொடர்புகள் மற்றும் ஏடிஎம் பராமரிப்புக்கு ஆண்டுதோறும் ரூ. 2 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதை அபராதம் மூலம் ஈடுகட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

‘‘கடந்த ஜூன் மாதம் வரை 60 மில்லியன் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 235.06 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 27 கோடி கணக்குகளில் 20 சதவீத கண க்குகளில் குறைந்தபட்ச தொகை பராமரிப்பது கிடையாது. இதற்கு முறையான அறிவிப்பு மற்றும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டு ஜூன் மாதம் முதல் அபராதம் வசூல் செய்யும் பணி தொடங்கியது. இது போன்ற அபராதங்களில் இருந்து மூத்த குடிமகன்கள் மற்றும் மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இது போன்ற அபராதம் ஆண்டிற்கு ஒரு முறை தான் வசூல் செய்யப்படுகிறது. இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தள்ளது. எஸ்பிஐ வசம் 400 மில்லியன் கணக்குகள் உள்ளது. இதில் 130 மில்லியன் ஜன்தன் கணக்குகளாகும்’’ என்றார்.