மதுரை:

டி.டி.வி.தினகரன்ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 18 பேரைதகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லாது என்று முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்ப பெறுவதாக கவர்னரிடம் கடிதம் அளித்தனர்..

இந்த விவகாரம் தொடர்பாக 19 எம்.எல்.ஏ.க்கள்மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

கடந்த 14-ந்தேதிவரை இதற்கு கெடு விதித்திருந்தபோதும் தினகரன்அணி எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்கவில்லை. இதற்கிடையே அந்தஅணியில் இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. முதல்வர் எடப்பாடி அணிக்கு தாவிவிட்டார்.

இந்தநிலையில் விளக்கம் அளிக்காத 18 எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்வதாக, சபாநாயகர் தனபால் இன்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறது தினகரன் தரப்பு.

இந்தநிலையில் சபாநாயகரின் உத்தரவு சரியானதுதானா? என்று வாதப்பிரதிவாதம் நடந்து வருகிறது.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிடம் கேட்டபோது, அவர் தெரிவித்ததாவது:

“கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது பற்றிய முழுவிவரங்களும் அரசியல் சட்டத்தின் பத்தாவது அட்டவணையிலும், தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினர் தகுதியிழப்பு விதிகள் 1986-ல்குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு உறுப்பினர் தகுதி இழப்புக்கு மனு கொடுக்கலாம். அதன்மீது சபாநயகர் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று முழுமையாக விதிகள் உள்ளன. கொறடாவிடம் தெரிவிக்காமல் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர் என்பதற்காக அவர்கள் கட்சியில் இருந்து விலகி விட்டனர் என கூறுவது தவறு. இதுகுறித்து கொறடா கொடுத்த மனுவும் தவறானது.

ஆகவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கான காரணம் சரியானது அல்ல. கட்சித்தாவல் சட்டப்படி தினகரன்அணி எம்.எல்.ஏ.க்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இது இயற்கை நியதிக்கு எதிரானதாகும்.

தமிழகஅரசு பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியில் இறங்கி இருக்கிறது. நியாயமாக பார்க்கபோனால் ஓ.பி.எஸ்.அணிமீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையில் சபாநாயகர் மட்டுமல்லாமல் முதல்-அமைச்சர், அரசுகொறடா ஆகியோரும் நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாக நேரும்” என்று சேடப்பட்டி முத்தையா தெரிவித்தார்.