டில்லி
ஒரு தொழிலதிபர் வீட்டில் வருமான வரி அதிகாரி வேடத்தில் வந்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து அடித்து போலிசிடம் ஒப்படைத்தனர்.
டில்லியில் மாளவியா நகரில் வசிக்கும் தொழிலதிபர் ரமேஷ் சந்த். இவர் எலெக்ட்ரானிக் பொருட்களை வியாபாரம் செய்பவர். நேற்று காலை சுமார் 9.05 மணிக்கு இவர் வீட்டில் ஆறு பேர் டாடா சஃபாரி வாகனத்தில் வந்தனர். அந்த வாகனத்தின் கண்ணாடியில் அரியானா அரசின் சின்னம் ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஆறு பேரும் தங்களை வருமான வரி அதிகாரிகள் என சொல்லிக் கொண்டனர். சட்டத்துக்கு புறம்பாக ரூ.20 கோடி வரி ஏய்ப்பு பற்றி சோதனை நடத்த வந்துள்ளதாக கூறி உள்ளனர்.
வருமான வரி அதிகாரிகள் சோதனையின் போது வீட்டில் உள்ளோர் மொபைல் ஃபோனை வாங்கி சுவிட்ச் ஆஃப் செய்து விடுவார்கள். அதைப் போலவே இவர்களும் செய்துள்ளனர். இவர்கள் வீட்டை சோதனையிட துவங்கினர். வீட்டில் உள்ளோரை மிரட்டி வீட்டில் உள்ள ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த கும்பலின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ரமேஷின் மகள் அவர்களுக்கு தெரியாமல் பக்கத்து வீட்டில் உள்ள சஞ்ஜீவ் ராவ் என்பவரிடம் இவர்களைப் பற்றி கூறி உள்ளார். அவர் காவல்துறையின் நண்பர் என்னும் அமைப்பை சேர்ந்தவர். அவர் அந்த வீட்டினுள் நுழைந்து அந்த ஆறு பேரிடமும் அவர்களின் ஐ டி கார்டை கேட்டுள்ளார். அவர்களில் தலைவராக இருந்தவர் ஒரு கார்டை கொடுத்துள்ளார்.
அதில் அவர் வருமான வரித்துறையின் உதவி கமிஷனர் என இருந்தது. அந்த கார்டில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டதும் சஞ்ஜீவுக்கு மிகவும் சந்தேகம் வந்து அவர்களை மேலும் விசாரித்துள்ளார். இதற்குள் இது பற்றி தெரிந்துக் கொண்ட அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் சுமார் 100-150 பேர் ரமேஷ் வீட்டு வாசலில் கூடி விட்டனர்.
அந்த பொது மக்கள் உள்ளே புகுந்ததும் பயந்து போன கும்பல் தாங்கள் போலி அதிகாரிகள் என்பதை ஒப்புக் கொண்டனர். ஆத்திரமடைந்த பொது மக்கள் அவர்களை அடிக்க ஆரம்பித்தனர். சஞ்ஜீவ் ராவ் அவர்களை அமைதிப் படுத்தி கொள்ளையர்களை போலிசில் ஒப்படைத்துள்ளார்.
போலிசின் விசாரணையில் அவர்கள் மிதேஷ் குமார், நவுன்கியால், யோகேஷ் குமார், கோவிந்த் ஷர்மா, அமித் அகர்வால் மற்றும் பாவிந்தர் என்னும் பெயருடைய கொள்ளையர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களுடைய மற்றொரு கூட்டாளியான கவுரவ் வாசலில் மற்றொரு காருடன் காத்திருந்துள்ளார். கூட்டம் சேரவே அங்கிருந்து தப்பி விட்டார்.
போலீசார் அவர்களிடமிருந்து ரூ. 20 லட்சம் ரொக்கத்தையும், டாடா சஃபாரி வாகனத்தையும் கைப்பற்றினர். ரமேஷ் சந்தின் ஒரு தூரத்து உறவினர் இவர்களுக்கு அந்த வீட்டில் ரூ. 20 லட்சம் வங்கியில் இருந்து எடுத்திருப்பதை சொல்லி உள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பணத்தை கொள்ளை அடிக்க இவ்வாறு திட்டமிட்டு கொள்ளையர்கள் புகுந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாகி விட்ட அந்த உறவினரையும், காருடன் காத்திருந்த கவுரவையும் போலீசார் தேடி வருகின்றனர்.
[youtube https://www.youtube.com/watch?v=s76-xWscVEc]
Video courtesy : Youtube