சென்னை:

குதி நீக்கம் செய்யப்பட்ட எல்எல்ஏக்கள் 18 பேரில் பலரை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் பரவியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்ற எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் இன்று தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க., வி.சி.க., உள்ளிட்ட சில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இன்னொரு புறம் தினகரன் தரப்பு, நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களில் பலரை கைது செய்ய தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் மர்ம மரண வழக்கில் எம்எல்ஏ பழனியப்பனை காவல் துறை விசாரித்து வருகின்றது. இந்த வழக்கில் எம்எல்ஏ பழனியப்பனை விரைவில் கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் பரவியுள்ளது.

இதேபோல் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

வேலைவாங்கித்தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது புகார் இருக்கிறது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படுவார் என்றும், அவரை தேடிவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜியை தேடி கர்நாடகா சென்றுள்ளார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.