ஆலந்தூர்,
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுகவில் இருந்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம், செய்தி யாளர்கள், முதல்வர் எடப்பாடி ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த கனிமொழி, யாருடைய கருத்துகளுக்கு பதில் கேட்க வேண்டும் என்று சில வரைமுறைகள் இருக்கிறது. மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கிற தகுதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. அவருடைய பதிலுக்கு பதில் சொல்கின்ற தேவையும் கிடையாது என்றார்.
தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து, கவர்னரிடம், அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடுமாறு இரண்டுமுறை கேட்டுவிட்டோம். அதன் பின்னர் ஜனாதிபதியை சந்தித்து, தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து விளக்கி சொன்னோம். ஆனால் எந்தவித பதிலும் கிடைக்காததால் தி.மு.க. நீதிமன்றத்தை அணுகி உள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்துதான் அடுத்த கட்டம் பற்றி முடிவு செய்யப்படும் என்றார்.
அதிமுகவில் டிடிவியும், எடப்பாடியும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்களே என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், இரண்டு பேரும் ஒன்றாக இருந்தபோது மூன்றாவது நபர் மீது குற்றச்சாட்டுகள் வீசினர். தற்போது அ.தி. மு.க.வில் இது விளையாட்டுபோல மாறிவிட்டது.
இவர்களால் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற முடியவில்லை இந்த நிலையில் இவர்கள் மற்றவர்கள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.