புத்னி, மத்திய பிரதேசம்
பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியார் மத்திய பிரதேச மாநிலத்தில் நடத்தி வரும் பள்ளியின் கதி என்னாகும் என மாணவிகளின் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சாமியார் ராம்ரஹீம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிர்சாவில் உள்ள அவரது ஆசிரமத்தில் சோதனைகள் நடைபெற்றன. அவரது ஆசிரமத்தின் சார்பில் மத்தியப்பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் புத்னி என்னும் ஊரில் ஷா சத்னாம்ஜி மகளிர் பள்ளி என்னும் பெயரில் ஒரு பள்ளி நடத்தப் பட்டு வருகிறது. இந்தப் பள்ளி 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் 433 மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.
தற்பொழுது இந்தப் பள்ளியின் தாளாளர் பலாத்கார வழக்கில் சிறையில் அடைபட்டதால் தொடர்ந்து பள்ளி நடக்குமா என்பதும் இந்தப் பள்ளியில் படிப்ப்பதால் தங்கள் மகள்களின் பெயருக்கு களங்கம் வருமா என்பதும் பெற்றோர்களின் சிந்தனையாக உள்ளது. பல மாணவிகளின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளதாகவும் அதற்கு நிர்வாகம் மறுக்கவே, அவர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு மாணவியின் தாய், “பொதுமக்கள் தற்போது இந்த பள்ளியைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் விமரிசித்து வருகின்றனர். எனது மகள் இங்கு தொடர்ந்து படித்தால் அவள் நற்பெயருக்கு களங்கம் வருமோ என அஞ்சுகிறேன்” என கூறி உள்ளார். மற்றொரு மாணவியின் தகப்பனார், “முன்பிருந்தே இந்தப் பள்ளியின் போக்கு சரியில்லை. ஒரு முறை விஞ்ஞான கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக ரூ.300 வசூல் செய்து விட்டு போபால் அழைத்துச் சென்றவர்கள் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லாமல் ராம்ரஹீம் நடித்த திரைப்படத்தை காண ஒரு சினிமா மாலுக்கு கூடிச் சென்றுள்ளனர். தற்போது பாபா ராம்ரஹீம் பலாத்கார வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ளதால் நான் என் மகளை வேறு பள்ளிக்கு மாற்ற எண்ணுகிறேன்” என தெரிவித்தார்.
சாமியார் கைதுக்குப் பின் சில தினங்கள் இந்த பள்ளி மூடப்பட்டிருந்ததும் பெற்றோர்களிடையே கலக்கத்தை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளின் பெற்றோர் இந்த பள்ளி சரியாக நடைபெறுமா என்னும் கலக்கத்தில் உள்ளனர்.
மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து சில அதிகாரிகள் இந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அதில் ஒருவரான மீனா, “இந்தப் பள்ளியில் ஏதும் முறைகேடுகள் நடை பெற்றதாக தெரியவில்லை. இந்த பெண்கள் பள்ளியில் அனைத்து பணியாளர்களும் பெண்கள் மட்டுமே. தவிர வெளியாட்கள் யாரும் பள்ளி நேரத்தில் உள்ளே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் 200 மாணவிகளிடம் விசாரித்ததில் யாரும் பள்ளியை பற்றி தவறான தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் இதுவரை பாலியல் தொந்தரவு பற்றி எந்த ஒரு புகாரும் எந்த மாணவியும் அளிக்கவில்லை” என தெரிவித்தார்.
ஆனால் மாணவிகளின் பெற்றோர் இந்தப் பள்ளி தொடர்ந்து நடைபெறுமா என்பதில் இன்னும் சந்தேகத்துடனேயே இருந்து வருகின்றனர்.
அரியானாவில் உள்ள தேரா சச்சாவை சேர்ந்த அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்ற போதிலும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தப் பள்ளியில் அது போல சோதனைகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.