நெல்லை :

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறத்தி நெல்லை அருகே பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 7ம் தேதி முதல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். போராட்டக் களத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகேயுள்ள வன்னியன்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் காளிமுத்து.

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள அருகன்குளத்தை சேர்ந்தவர் இவர்.  இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு குழந்தை இல்லை.

சமீபத்திய போராட்டத்தில் காளிமுத்துவும் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பெற்றோருடன் உணவருந்தினார். பிறகு வழக்கம் போல வெளியில் சென்று விட்டு வருவதாக குடும்பத்தாரிடம் கூறி விட்டு சென்றார். அவர் சிறிது தூரம் நடந்து சென்றவுடன் விஷத்தை குடித்து அங்கேயே மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

அவரை உறவினர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காளிமுத்து மரணடைந்தார்.