திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்சரமூடு பகுதியை சேர்ந்தவர் பினு பிலிப். 44 வயதாகும் இவர் டைல்ஸ் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அறிய வகை புறாக்களை சேகரித்து வளர்த்து வருகிறார்.
ரூ. 1 லட்சம் விலை கொண்ட புறாக்களை இவர் வளர்த்து வருகிறார். கடந்த 4ம் தேதி இவர் கு டும்பத்தோடு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்த ரூ. 48 ஆயிரம் வரை மதிப்பிலான 10 புறாக்கள் மாயமாகியிருந்தது.
இது குறித்து பினு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்து துணி கட்டிய இரண்டு நபர்கள் பினு வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு பெட்டியை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.
அதை திறந்து பார்த்தபோது அதில் மாயமான புறாக்களில் சிலவற்றும், மேலும் சில புறாக்களும் இருந்தன. அதில் ஒரு மன்னிப்பு கடிதமும் இருந்தது. கோடு போட்ட நோட்டு பேப்பரில் பென்சிலால் இந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.
அதில், ‘‘நான் உங்களது வீட்டிற்கு ஒரு முறை வந்தேன். அதனால் ஆசைப்பட்டு புறாக்களை திருடிவிட்டேன். அதற்காக எனக்கு சாபம் விட வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள். எனது வாழ்க்கையில் முதன்முறையாக இந்த தவறை செய்துவிட்டேன். இதை திரும்ப செய்ய மாட்டேன்.
இந்த புறாக்களை எடுத்துச் சென்ற பிறகு என்னால் நல்ல முறையில் படிக்க முடியவில்லை. எனது தாயும் என்னை திட்டினார். என்னால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட நான் வேலைக்கு சென்றவுடன் அடைக்கிறேன். அதனால் புறாக்களை நான் திருப்பி கொடுத்துவிட்டேன். அதோடு எனது புறாக்களையும் சேர்த்து கொ டுத்துள்ளேன்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து பினு கூறுகையில்,‘‘ எனது வீட்டிற்கு ஒரு முறை புறாக்களை பார்வையிட வந்த பள்ளி மாணவர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அறிய வகை 5 புறாக்களும் திரும்பி வந்துவிட்டது. இதில் ஒரு புறாவின் இறக்கை மட்டும் வெட்டப்பட்டுள்ளது. இதனால் இழப்பு எனக்கு அதிகம். மேலும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள புறாக்களை காணவில்லை. அதனால் புகாரை திரும்ப பெறும் எண்ணமில்லை’’ என்றார்.