மும்பை:

ஓடும் ரெயிலில் தொங்கியவாறு போராடிய பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் துணிச்சலுடன் காப்பாற்றினார்.

மும்பை நலசோபரா ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று புறநகர் ரெயிலில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 55 வயது லதா மகேஸ்வரி என்பவர் தனது மகளுடன் ஏறினார். மகள் ஏறிய பின்பு தாய் ஏறுவதற்குள் ரெயில் புறப்பட்டதால் அவர் வாசல் கதவில் இருந்த கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கினார். அவரை ரெயில் இழுத்துக் கொண்டே சென்றது.

அப்போது அங்கு பணியிலல் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணராவ் என்பவர் உடனடியாக செயல்பட்டு அந்த பெண்ணை பிடித்து காப்பாற்றினார். கோபால கிருஷ்ணராவ் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் செயல்பட்டதால் அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். இல்லை என்றால் ரெயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த பெண் தண்டாவாளத்திற்குள் இழுத்து செல்லப்பட்டிருப்பார்.

இதனால் தக்க சமயத்தில் துணிச்சலுடன் பெண்ணை காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டரை பயணிகள் பாராட்டினர். உயிர் தப்பிய பெண்ணும் மகளும் சப் இன்ஸ்பெக்டருக்கு நன்றி கூறினர். இதில் மகேஷ்வரிக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.