டில்லி
கருப்புப் பணத்தை கண்டுபிடிக்க முகநூல் போன்ற சமூக வலைதள கணக்குகளை வருமானவரித்துறை கண்காணிக்க உள்ளது.
இனி முகநூலிலோ அல்லது இன்ஸ்டாகிராமிலோ வேறு எந்த சமூக வலை தளத்திலோ கணக்கு வைத்திருப்பவர்கள் கவனமாக பதிவுகளை மேற்கொள்ள வேண்டி வரலாம். இதோ எனது புதிய கார் என பளபளக்கும் சொகுசு கார்களை பதிபவர்களும், இந்த கைக்கடியாரம் புதுசா ஜஸ்ட் .. லட்சத்துக்கு வாங்கினேன் என அலட்டிக் கொள்பவர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டி வரும். இதை வாங்க உங்களுக்கு பணம் எப்படி வந்தது என்னும்கேள்வியுடன் உங்கள் வீட்டு வாசலில் உடனடியாக வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் நிற்கக் கூடும்.
வருமான வரித்துறை இனி சமூக வலை தளத்தில் உள்ள அனைத்து கணக்குகளையும் கண்காணிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அவற்றில் மேலே கூறியது போன்ற பதிவுகள் வரும் போது, அந்த கணக்கு வைத்திருப்பவர்களின் வருமான விபரங்களும், இந்த பொருட்கள் சட்டப்படி வந்த வருமானத்தில் வாங்கப்பட்டதா என்பதையும் பரிசோதிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் கருப்புப் பணத்தை கண்டுபிடிக்கவே இந்த நடவடிக்கைகள் என சொல்லப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் கருப்புப் பணம், சட்ட பூர்வமற்ற வருமானம், வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக வரும் வருமானம், போன்றவைகளையும் கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறதாக கூறப்படுகின்றன.