சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தற்காக அரசால் எச்சரிக்கை செய்யப்பட்ட ஆசிரியை சபரிமாலா தனது ஆசிரியை வேலையை ராஜினாமா செய்துவிட்டு நீட்டுக்கு எதிராக போராடி வந்தார்.
தற்போது நீட் போராட்டத்துக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளதை தொடர்ந்து, அவர் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஜக்காம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகாந்தன் என்பவரின் மனைவி சபரிமலா. இவர் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்றில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் பட்டிமன்ற பேச்சாளராகவும் இருக்கிறார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு அமல்படுத்தியதன் காரணமாக, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.
ஆசிரியை சபரிமாலா நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து கடந்த 6ம் தேதி முதல் தனது மகனுடன் பள்ளி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதையடுத்து தனது வேலையை ராஜினாமா செய்வதாக கூறி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் அதற்கான கடிதத்தையும் கொடுத்தார்.
இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டின் முன்பு சபரிமாலா உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
அப்போது கையில் கோரிக்கை பதாகையும், மாணவி அனிதாவின் படங்களும் வைத்திருந்தார்.
அவரது உண்ணாவிரதத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்பு கொடுத்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சபரிமாலாவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்
இந்த நிலையில் விஜயகாந்தி கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு காரணமாக, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த தடை சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
இதையடுத்து, நேற்று மாலையில் அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், நீட் தொடர்பாக யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால் நீங்கள் போராட்டத்தை முடிக்காவிட்டால் கைது செய்வோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து சபரிமாலா தனது போராட்டத்தை முடித்து கொண்டார்.