சென்னை:

மிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை மீறி ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

7ஆவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், தமிழக அரசின் 8வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தை அறிவித்தது.

இதற்கிடையில் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து கால வரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.

இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சேகர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , அரசு ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று கூறி போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் வரும் 14-ம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பின் செயலாளர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் கோர்ட்டு உத்தரவை மீறி சென்னை எழிலகம் வளாகத்தில்  அரசு ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது.

இன்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக கோரிக்கை கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி தலைமை செயலாளர் அழைப்பு விடுத்தும் அதனை ஏற்காமல் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொணடனர்.