மும்பை,
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்தும், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அபுசலிமுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு தடா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
1993 ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதல்களில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு 24 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் என கருதப்பட்டவர்களில் பலர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், முதலில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து 2006ம் ஆண்டு இந்தி நடிகர் சஞ்சய்தத் உட்பட 100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் 2015ம் ஆண்டு துக்கிலிடப்பட்டார்.
தொடர்ந்து குற்றவாளிகளை தேடும் படலம் நடைபெற்றதான் வாயிலாக 2010 ம் ஆண்டு வரை மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பிறகு அபு சலீம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம் கூறியிருந்தது.
அதைத்தொடர்ந்து இன்று மும்பை தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக, தாகீர் மெர்சன்ட், பெரோஸ்கான் ஆகிய 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலுரம், அபுசலீம், கரிமுல்லாகானுக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 10 சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.