டில்லி

நாட்டில் அதிக விபத்துக்கள் நிகழும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்திற்கு வந்து மும்பையை பின்னுக்கு தள்ளியுள்ளது.

மத்திய சாலை அமைச்சகம் இந்திய நகரங்களில் சென்ற ஆண்டு நடந்த சாலை விபத்துக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பில் அதிக விபத்துக்கள் நடந்துள்ள நகரங்கள், விபத்தினால் அதிக இறப்புகள் நிகழ்ந்த நகரங்கள், அதிக விபத்து நடந்த மாதங்கள் மற்றும் நேரங்கள் ஆகியவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சென்னையில் 7328 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளது.  அதற்கு முந்தைய வருடத்தில் மும்பையில் நிகழ்ந்த விபத்துக்களை விட இது பன்மடங்கு அதிகமாகும். குறிப்பாக சென்னையில் மெட்ரோ ரெயில் வேலைகள் நிகழும் இடங்களில் அதிக விபத்துக்கள் நடப்பது தெரிய வந்துள்ளது.

டில்லியில் 1591பேர் விபத்தில் இறந்துள்ளனர்.  அடுத்த இடங்களில் சென்னை (1183), ஜெய்ப்பூர் (890), பெங்களூரு (835), கான்பூர் (684) ஆகிய நகரங்கள் உள்ளன.  கேரளாவில் உள்ள கண்ணூர் நகரத்தில் 52 பேரும், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 51 பேரும் மரணம் அடைந்து கடைசி இரு இடங்களில் உள்ளன.

மொத்தத்தில் நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிக விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.  மே மாதத்தில் அதிக விபத்துக்களும் செப்டம்பரில் குறைவான விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன.  அதிகமான விபத்துக்கள் பின்னிரவு மற்றும் விடியற்காலை நேரங்களில் நிகழ்ந்துள்ளன.   வாகனத்தை செலுத்தும் போது மொபைல் ஃபோனை உபயோகிப்பதே முக்கிய காரணம் ஆகும்.  அடுத்ததாக டிரைவர்களின் கவனக்குறைவு, மற்றும் தவறான சைடில் செல்வது ஆகியவைகளாலும் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.   எல் எல் ஆர் என்னும் கற்றுக் கொள்வார் லைசென்ஸ் வைத்திருப்பவர்களை விட ரெகுலர் லைசென்ஸ் வைத்திருப்பவர்களால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.