டில்லி:
இந்திய ரூபாய் நோட்டுக்கள் 4 அச்சகங்களில் அச்சடிக்கப்படுகிறது. இதில் இரண்டு பொதுத் துறையான எஸ்பிஎம்சிஐஎல் சார்பில் நாசிக் மற்றும் தேவாஸில் செயல்படுகிறது. பிஆர்பிஎல்எம்பிஎல் அச்சகம் 2 இடங்களில் செயல்படுகிறது. இவை மைசூர் மற்றும் மேற்குவங்க மாநிலம் சல்போனில் செயல்படுகிறது.
கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். இதில் புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதோடு புதிதாக 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.
திடீரென இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால் இந்த அச்சகங்களுக்கு ரூ. 577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதை ரிசர்வ் வங்கி செலுத்த வேண்டும் என்று அச்சகங்கள் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1,000 ஆகியவை அச்சடிப்பதற்காக கரன்சி தாள்கள் இறக்குமதி செய்து வைக்கப்பட்டிருந்தது. மேலும், பல ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அச்சடிக்கப்பட்டும், இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கச்சா பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது என பல வகைகளில் இவை வீணாகியுள்ளது. இதனால் அச்சகங்களுக்கு ரூ. 577 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கான இழப்பீட்டு தொகையை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும் என்று அச்சகங்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளன. இந்த அச்சகங்கள் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணியை மட்டுமே மேற்கொள்கிறது. வணிக ரீதியிலான எந்தவிதமான அச்சடிக்கும் பணிகளையும் இவை மேற்கொள்வது கிடையாது. பணமதிப்பிழப்பால் தற்போது புதிய பிரச்னை எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.