சென்னை

மிழகத்துக்கு புதிய கவர்னராக உ. பி. மாநிலத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி ரோசையாவின் கவர்னர் பதவிக்காலம் முடிவடைந்த பின் தமிழகத்துக்கு புது கவர்னர் நியமிக்கப்படவில்லை.  மகாராஷ்டிரா கவர்னரான வித்யாசாகர் ராவ் கூடுதல் பொறுப்பாக தமிழக கவர்னர் பதவியையும் கவனித்து வந்தார்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அவர் பொறுப்பேற்றதிலிருந்தே முழு நேர கவர்னர் எப்போதும் நியமிக்கப் படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா தமிழக கவர்னராக நியமிக்கப் படலாம் என அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.  மேலவை உறுப்பினரான கல்ராஜ் மிஸ்ரா மத்திய அரசில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் இணை அமைச்சராக இருந்தார்.  தற்போது இவர் தனக்கு 73 வயதானதால் ஓய்வு தேவை என தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.  இதைத் தொடர்ந்து அவர் தமிழக ஆளுனராக நியமிக்கப்படுவார் என சிலர் கூறி வருகின்றனர்.

கல்ராஜ் மிஸ்ரா உத்திரப்பிரதேசத்தில், காஜிப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர்.  இவர் பிராமண வகுப்பை சேர்ந்தவர்.  உ பி மாநில அரசில் அமைச்சராக பணியாற்றிய இவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்.  உத்திரகாண்ட் மாநில உருவாக்கத்தில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.  இவர் வயதானாலும், பணிகளை சிறப்பாக செய்வதால் இவரை ஆளுநராக்க மோடி விரும்புவதாகவும், தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டதும் இவரை தமிழக கவர்னராக நியமிப்பார் எனவும் கூடுதலாக சொல்லப்படுகிறது.