நாளை நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாப்படுகிறது.   இஸ்லாமியர்களின் ஈகை பெருநாளான பக்ரீத் பண்டிகைக்கு தமிழக கவர்னர், முதல்வர் உள்பட கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  இஸ்லாம் போதிக்கும் அன்பு, இரக்கம், பணிவு போன்ற நர்குணங்களைக் கடைபிடிப்போம் என்றும் மனித நேயத்துடனும் சகோதரத்துவத்துடனும் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வைகோ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,

“ஈதுல் அல்ஹா என்னும் ஈகையின் மாண்பினைக் கூறும் உன்னதத் திருநாள்தான் பக்ரீத் பண்டிகையாக உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தனது முதிய வயதில் தனக்குப் பிறந்த ஒரே மகனான இஸ்மாயிலை மூன்று முறை தனது கனவில் கண்டதை இறைவனின் கட்டளையாகக் கருதி நபி இப்ராகிம் (அலை) பலியிட முனைந்த தியாகம் இப்புவனம் எங்கும் நினைவு கூரப்படுகிறது.

இஸ்லாமிய வரலாற்றின் தொடக்க கால திருப்புமுனைதான் இந்த நிகழ்ச்சி. நிறம், சாதி, மொழி, இனம், தேசம் என்ற வரம்புகளைக் கடந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உணர்வுடன் அரபா பெருவெளியில் மக்கள் கடலாக சங்கமித்து, இஸ்லாமிய மக்கள் இந்நாளில் வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

மதச்சார்பின்மைதான் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கின்ற அரணாகும். அதனைத் தகற்பதற்கு அராஜக சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசே பக்க பலமாகச் செயல்படுவது இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, விபரிதமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் உறுதிகொள்வோம்.

பக்ரீத் பண்டிகை நன்னாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு இதயமார்ந்த பக்ரீத் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்”.

மேலும் அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துச் செய்திகளை தெரிவித்து உள்ளார்கள்.