சிம்லா
சிம்லாவில் கடந்த ஜூலை மாதம் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த கைதி மரணம் அடைத்ததை ஒட்டி சி பி ஐ ஐ ஜி உட்பட 8 போலீசாரை கைது செய்துள்ளது.
சிம்லா அருகே உள்ள கோத்காய் என்னும் இடத்தில், கடந்த ஜூலை மாதம் ஒரு 16 வயது சிறுமி கடத்தப்பட்டு, பலாத்காரத்துக்கு உள்ளாகி, கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என மாநிலத்தில் போராட்டம் வெடித்தது. ஐ ஜி ஜாகுர் கைதர்
ஜைதி தலைமையில் அமைந்த போலீஸ் குழு ஆறு பேரை கைது செய்தது. ராஜேந்தர் சிங், சுபாஷ் சிங், தீபக், ஆஷிஷ் சவவுகான், மற்றும் நேபாளத்தை சேர்ந்த சூரஜ் சிங், லோக் ஜன் ஆகியோரை காவலில் வைத்தது. இதில் முக்கிய குற்றவாளியான ராஜேந்தர் சிங், மற்றும் சூரஜ் சிங் ஆகியோர் ஒரே அறையில் காவலில் இருந்தனர்.
காவலில் இருந்த நேபாளி சூரஜ் சிங் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரை ராஜேந்தர் சிங் கொன்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் சூரஜ் சிங்கின் மனைவி மம்தா, தனது கணவரும் ராஜேந்தரும் சகோதரர்கள் போல் பழகி வந்ததாகவும், அதனால் அவர் கொன்றிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர். கொதிப்படைந்த பொது மக்கள் ஒன்று கூடி அந்த காவல் நிலையத்துக்கு தீ வைத்தனர். கடும் அமளிக்குப் பின் இந்த வழக்கு சி பி ஐ இடம் ஒப்படைக்கப்பட்டது.
சி பி ஐ விசாரணை செய்து நேற்று, ஐ ஜி உட்பட 8 போலீசாரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஐ ஜி ஜாகுர் கைதர் ஜைதி, டி எஸ் பி மனோஜ் ஜோஷி, ராஜிந்தர் சிங், சந்த் ஷர்மா, மோகன்லால், சூரத் சிங், ரஃபிக் அலி மற்றும் ரஞ்சித் சிங் ஆகியோர் ஆவார்கள். இவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக சி பி ஐ தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சி பி ஐ, சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து ஒரு வழக்கும், காவலில் இருந்த கைதி சூரஜ் சிங் மர்ம மரணம் பற்றியும் இரு தனி வழக்குகள் பதிந்துள்ளது