விநாயக சதுர்த்தி நாடெங்கும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது, பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 16ஆம் தேதியன்று கொடியேற்றி தொடங்கப்பட்டது.
தற்போது தினமும் ஒரு உற்சவமும், பிள்ளையார் திருவீதி உலாவும் நடந்து வருகிறது. அந்த வரிசையில் நேற்று காலை வெள்ளி கேடகத்தில் உற்சவர் புறப்பாடு நடந்தது. நேற்று மாலை மயில் வாகனத்தில் பிள்ளையார் திருவீதி உலா நடைபெற்றது. இன்று இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது.
நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 8.30 மணி அளவில், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேரில் எழுந்தருளுவார்கள். அதன் பின் வடம் பிடித்தல் துவங்கி, குடவறை அமைந்துள்ள மலையை தேர் வலம் வரும். மாலை 4.30 மணி முதல் விநாயகர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். சந்தனக்காப்பு அலங்காரம் வருடத்தில் ஒருமுறை மட்டுமே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயக சதுர்த்தியான ஆகஸ்ட் 25 அன்று, கோயில் திருக்குளத்தில் உற்சவருக்கு தீர்த்த வாரி நடைபெற உள்ளது. அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் திருவுலா நடை பெறும்.