சென்னை,
தமிழக அரசுக்கு 22 எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முன்னதாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுடன் பேசிய, ஸ்டாலின்,
எடப்பாடிக்கு அதிமுகவை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்றுள்ள 3 கட்சிகளைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோரும் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று எழுதிக் கொடுத்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.
இந்நிலையில், உடனடியாக நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்திரவிட வேண்டும். அதற்குரிய வகையில் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். அதனை அவர் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றும்,
இந்த ஆட்சியை அகற்றுவதற்கு ஏற்றவகையில், வாக்கெடுப்பு நடத்தும் சூழ்நிலை வரும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆழ்ந்து பரிசீலித்து, நிச்சயமாக ஒரு நல்ல முடிவை, உரிய வகையில் எடுக்கும் என்றும் கூறியிருந்த நிலையில், தற்போது ஆளுநருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.