மும்பை
ஆணாக மாறிய ஆரவ் அப்புக்குட்டன் என்பவர் பெண்ணாக மாறிய சுகன்யா கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்.
கேரளாவை சேர்ந்தவர் 46 வயதான ஆரவ் அப்புக்குட்டன். இவர் பிறவியில் பெண்ணாகப் பிறந்தவர். ஆனால் வளர வளர இவருக்கு ஆண் தன்மையே மிகுந்திருந்தது. ஆயினும் இவர் பெற்றோர்களும் சுற்றத்தினரும் இவரை பெண்ணாகவே கருதி வந்தனர். தனது 13 வயதில் பெண்ணைப் போல் உடையணிந்து நீண்ட கூந்தலுடன், பெண்களின் பக்கத்தில் பள்ளியில் அமர்ந்துள்ளார். வெளியில் பார்ப்பவர்களுக்கு வித்தியாசம் தெரியாவிடினும், இவர் மனதளவில் ஆண் என்பதால் பெண்களுக்கிடையில் அமர அவர் கூச்சப்பட்டுள்ளார்.
தனது நிலையை தன் தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார். தாயார் இவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர் பருவமடையும் தருணத்தில் இவை சகஜம் என்றும் சிகிச்சை ஏதும் தேவைப்பட்டால் சில காலங்களில் செய்யலாம் எனவும் கூறி உள்ளார். அந்த நேரத்தில் அவர் தாயார் திடீரென மரணம் அடைந்தார். தந்தை மறுமணம் செய்துக் கொண்டார். இவருக்கு தன் சகோதர சகோதரிகளை காக்கும் பொறுப்பு தலையில் விழுந்தது.
தனது சிகிச்சையை விட சகோதர சகோதரிகளின் நலமே முக்கியம் எனக் கருதி அனைவரையும் வளர்த்து ஆளாக்கிய பின் பாலின மாற்று சிகிச்சைக்கு ஒரு மருத்துவமனையை அணுகினார். அங்கு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய 22 வயதான சுகன்யா கிருஷ்ணாவை சந்தித்தார். அவர் தனது பெற்றோர்களுடன் மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் விழுந்தது. இவருக்கும் மலையாளம் தெரியும் என்பதால் அவருடன் பேச ஆரம்பித்து, இருவரும் தொலைபேசி எண்களை மாற்றிக் கொண்டனர்.
சுகன்யாவும் சிறு வயதில் இருந்தே இந்த பாலின மாறுபாட்டால் பல தொல்லைகள் அனுபவித்துள்ளார். தந்தை இல்லாதவராதலால் தனது தாயிடம் தனது துன்பத்தை கூறியுள்ளார். அவர் சுகன்யாவை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். இவருக்கு ஆண் தன்மையை உண்டாக்கும் பல மருந்துகள் தரப்பட்டன. உடலில் தசைகள் வளர்ச்சிக்காக புரொட்டின் எக்கச்சக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அழுத்தத்தினால் தனது பத்தாம் வகுப்பு தேர்வறையில் சுகன்யா மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பிறகு தனியாக தேர்வு எழுதி சாஃப்ட்வேர் எஞ்ஜினீரிங் படித்து இப்போது வெப் டிசைனராக தொழில் தொடங்கியுள்ளார்.
இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். முதலில் சிம்பளாக திருமணம் செய்துக் கொள்ள இருந்தவர்கள் நண்பர்களின் வற்புறுத்தலால் கிராண்டாக கல்யாணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறுகின்றார்கள்.
இவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்தவமனை டாக்டர் சஞ்சய் பாண்டே, “இருவரும் முழுமையான ஆணாகவும் பெண்ணாகவும் மாறி விட்டனர். அதனால் திருமண வாழ்வில் எந்த ஒரு கஷ்டமும் இருக்காது. இது போல் பாலின கோளாறு உள்ளவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள். வேறு நாடுகளில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 18-19 லட்சம் செலவாகும் நேரத்தில் இந்தியாவில் சுமார் ரூ. 4-5 லட்சமே செலவாகும்” எனக் கூறினார்.
ஆரவ் மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் இது போல பாலின மாறுபாடு உணர்வு உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்க திட்டமிட்டுள்ளனர்.